நமது உடல் சிக்கலான, நேரத்திற்கேற்றபடி மாறக்கூடிய சமநிலைத் தன்மையில் உள்ளது. இந்த உள்ளார்ந்த சமநிலையே நமது பல்வேறு உடல் பாகங்களுக்கும் உடலைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே இணக்கமான ஒத்திசைவை உருவாக்குகிறது.
இயல்பான சமநிலையிலிருந்து நமது உடல் விலகும்போது அதில் அசாதாரண நிலை ஏற்படுகிறது. இதை எடியோ-பேத்தோஜெனிஸிஸ் (etio-pathogenesis) என்கிறார்கள். இவ்வாறு சமநிலை விலகுவதாலேயே நோய்கள் உண்டாகின்றன. உடலில் இயங்கிவரும் வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்) மற்றும் கபம் (நீர்) ஆகியவற்றில் ஏற்படும் சமநிலை இன்மையும், அவற்றின் விகிதத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுமே தோஷம் அல்லது நோயை உண்டாக்குவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
மரபணுக் குறைபாடு, சுற்றுச்சூழலினால் ஏற்படும் அழுத்தம், நோய்த் தொற்று, வாழ்க்கை முறைகளில் ஏற்படும் தொந்தரவுகள் போன்றவற்றால் நமது உடல் பாகத்திலோ அல்லது குறிப்பிட்ட உடல் உறுப்பிலோ ஏற்படும் நோய்க்கூறுகளே உடலில் நோய்களாக வெளிப்படுகின்றன. நோய் ஏற்படும்போது அதை நாம் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான அடையாளங்களும் அறிகுறிகளும் உருவாகின்றன.

நோய்க்கான பல்வேறு காரணங்கள்
வாழ்க்கை முறை
உணவு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் போன்றவற்றை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் உண்டாகின்றன. இவ்வகை நோய்கள் மது அருந்துதல், போதைமருந்துப் பழக்கம், புகைப்பிடித்தல், உடல்ரீதியான செயல்பாடு இல்லாதிருத்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் டைப்-II நீரிழிவு நோய் ஆகியவற்றை இதற்கான சில உதாரணங்களாகக் கூறலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக முற்காலத்தில் ஏற்பட்ட தொற்று நோய்கள் குறைந்து, தற்காலத்தில் ”தொற்று அல்லாத நோய்கள்” பெரும்பாலான மக்களைப் (Non Communicable Diseases) பாதிக்க ஆரம்பித்துவிட்டன.
மன அழுத்தம்
ஆயுர்வேதத்தின்படி, உணர்ச்சிகள் நமது மனதிலும் உடலிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது மனநிலை, நம் உடலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது உடல் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது. மன அழுத்தம், பதட்டம் போன்ற மனரீதியான காரணிகளால் சில நோய்கள் மிகவும் மோசமடைகின்றன. உதாரணமாக, எக்ஸீமா எனப்படும் தோல் அலர்சி, சொரியாஸிஸ் எனப்படும் தோல் படை நோய், உயர் இரத்த அழுத்தம், குடல் புண்கள் மற்றும் இதய நோய் ஆகியவை மன அழுத்தத்தினால் மேலும் மோசமாகக் கூடும். சில நேரம் நோய் உண்டாக எந்தவித உடல்ரீதியான காரணங்களும் இல்லாமல் போகலாம். மன அழுத்தம் காரணமாக ஏற்படும் மார்பு வலி இதற்கான உதாரணம் ஆகும். உடல் நடுக்கம், குமட்டல், உலர்ந்த வாய் போன்றவை மேலும் சில உதாரணங்கள் ஆகும்.
மரபணு
நமது உடலமைப்பிற்கு அடிப்படைக் கட்டுமானமாக விளங்கும் டி.என்.ஏ அமைப்பின் வரிசை அதன் இயல்பான நிலையிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மாறும்போது மரபணு சார்ந்த நோய்கள் உண்டாகின்றன. ஒருவரின் டி.என்.ஏவில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பிட்ட தூண்டுதல்களின்படி நோய்களையோ உடல்நலக் குறைபாடுகளையோ உண்டாக்குகின்றன. மரபணு சார்ந்த நோய்கள் பெற்றோரிடமிருந்தோ, ஒருவரின் வாழ்நாளில் ஏற்படும் சீரற்ற நிகழ்வுகளின் மூலமாகவோ, மோசமான சுற்றுச்சூழல்களாலோ உருவாகின்றன. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் மூச்சுத் திணறல், சிக்கிள் செல் அனீமியா எனப்படும் இரத்த சோகை, நிறக்குருடு ஆகியவற்றை மரபணு சார்ந்த நோய்களுக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
வெளிப்புறக் காரணிகள்
பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நோய்க்கிருமிகளாலும் மாசு, எரிச்சலூட்டும் வேதிப்பொருட்கள் போன்ற சுற்றுச்சூழல் தாக்கங்களாலும் நமக்குப் பல நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய வெளிப்புறக் காரணிகளால் நோய் உண்டாகும்போது, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியும், நச்சு நீக்கும் இயந்திரமும் தீவிரமாகச் செயல்பட்டு தேவையில்லாத வெளிப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகின்றன. உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்த்தொற்றுகளும் வீக்கங்களும் வெளிப்புறக் காரணிகளால் உண்டாகும் நோய்களுக்கான உதாரணங்களாகும்.
ஒரு தனிநபரை நோய் எவ்வளவு நேரத்திற்கு, எந்த அளவிற்குத் தாக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தும் நோய்களை வகைப்படுத்தலாம். இவை பின்வருமாறு:
கடுமையான நோய்
திடீரென வந்து குறுகிய காலமே நீடிக்கக்கூடிய, தனித்த அடையாளத்துடன் உள்ள நோய் அல்லது உடல்நலக் கோளாறையே கடுமையான நோய் என்கிறோம். இவை பொதுவாகவே திடீரென ஏற்பட்டு, தீவிரத்தன்மையுடன் உடலைப் பாதிக்கின்றன. இந்த நோயின் கால அளவு, நோயைப் பொறுத்து வேறுபடும்.
நாள்பட்ட நோய்
மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நோய் நீடித்தால் அதை நாள்பட்ட நோய் என்கிறோம். நாள்பட்ட நோயின் நிலை கடுமையானதாக, விடாமல் தொந்தரவு செய்வதாக இருக்கும். அதன் விளைவுகளும் தொடர்ந்து நீடித்திருக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உணவு உட்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், மன அழுத்தம் போன்றவை நாள்பட்ட நோய்களுக்கான உதாரணங்கள் ஆகும்.
ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் நாள்பட்ட நோயின் கடுமையான விளைவுகளைக் குறைக்கலாம். இதனால் சிகிச்சை முறைகளை எளிதாக்கவும் நோய்த்தடுப்பிற்கான நுட்பங்களைப் பயன்படுத்தி நோயைச் சிறப்பாக நிர்வகிப்பதும் எளிதாக இருக்கும். நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான முறைகளையும், நோய் வராமல் தடுப்பதற்கான முறைகளையும் உள்ளடக்கிய மருத்துவரீதியான தடுப்புச் சேவைகள் மூலம் இத்தகைய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.
நோய்களை எவ்வாறு கையாளுவது?
நமது உடல் இயல்பாகவே தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. இயற்கையின் சமநிலைக்குத் திரும்பிச்செல்வதற்கான வலுவான ஆற்றலையும் திறனையும் நமது உடல் கொண்டுள்ளது. எனவே நோயைச் கையாளுவதற்க்குச் சிறந்த வழி, உடலின் இயல்பான சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய மூல காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நீக்கி, உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே சிறந்த வழியாகும். ஒவ்வொரு நபருக்கும் சமநிலையைக் கொண்டுவர, அவரவர் உடலுக்கேற்றபடி சிகிச்சையானது தனிப்பட்ட முறையில் அமைய வேண்டும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று பரிமாணங்களுக்கும் சேர்த்து நிலையான, முழுமையான நலவாழ்வை உறுதிப்படுத்துவதே அத்தகைய குணப்படுத்தலின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மில்லியன்-ஐய்ஸ் ஹெல்த்கேர் (MillionEyes Healthcare) நிறுவனம், நம்மைக் குணப்படுத்தும் சூழலை ஏற்படுத்தக்கூடிய, தனிப்பட்ட உடல்நலத் திட்டங்களை உருவாக்கி வழங்குகிறது. மேலும் விவரங்களைப் பெற, எங்களுடன் தொடர்புகொண்டு பேசுங்கள்.