ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் உண்டாகும் தீமைகள்
நமது உடல் வலுவான குணமடையும் வழிமுறைகளைக் கொண்டுள்ளது. உடலால் நோயை உருவாக்கும் உட்புற மற்றும் வெளிப்புறக் காரணிகளுக்கு எதிராகப் போரிட்டு தனது இயல்பான ஒத்திசைவை மீட்டுக்கொள்ள முடியும். சில நேரங்களில், நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவிற்கு எதிராகப் போராட நமது உடலுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படும். இங்கு தான் உடலின் பாதுகாப்பான இயக்கத்திற்கு ஆதரவளிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகள் நமது உதவிக்கு வருகின்றன. ஆனால் ஆன்டிபயாட்டிக்குகளை கண்மூடித்தனமாக உட்கொள்வதும் நீண்டகாலத்திற்கும் பயன்படுத்துவதும் உடலின் பாதுகாப்பு இயக்கத்திற்கு உதவிசெய்வதற்குப் பதிலாக அதை மேலும் பலகீனமாக்கிவிடலாம்.
இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பயன்பாடு 2000-க்கும் 2015-க்கும் இடையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பயன்பாடு 2000-க்கும் 2015-க்கும் இடையில் இரு மடங்காக அதிகரித்து, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயனளிக்காமல் போவதை தூண்டியிருப்பதாக ப்ரொசீடிங்க்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் ஸையன்ஸ்(PNAS) நிகழ்த்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு அபாயம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை - டைம்ஸ் ஆஃப் இந்தியா, அக்டோபர் 2018
இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பயன்பாடு கடந்த 15 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது - தி ஹிந்து, மார்ச் 2018
ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் மிகுதியான பயன்பாடு உடலுக்குத் தீங்குகளை உண்டாக்கும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள் - தி ஹிந்து, ஜூலை 2018

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அதிகப்படியாகவும், முறையற்ற விதத்திலும் எவ்வாறு உட்கொள்ளப்படுகிறது?
- தேவையில்லாதபோது உட்கொள்ளுதல்: ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்களைத் தீர்ப்பதற்கானவை மட்டுமே. இவற்றால் வைரஸ்களாலோ பூஞ்சைகளாலோ உண்டாகும் நோய்களைத் தீர்க்க இயலாது. பொதுவாக ஜலதோஷமும் இருமலும் வைரஸ்களால் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. ஆனால் சமீப காலத்தில் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படாமல் மருந்துக் கடைகளில் நேரடியாக விற்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையும், முறையற்ற விதத்தில் ஜலதோஷத்திற்கும் இருமலுக்கும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
- பொருத்தமற்ற அளவு: பல நோயாளிகள் நோய் தீர்ந்ததுபோல் உணர்ந்ததும் உடனடியாக ஆன்டிபயாட்டிக் உட்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தபடி 3, 5 அல்லது 7 நாட்கள் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சில நேரங்களில் நோயாளிகள் தேவைப்படும் அளவை விடக் குறைவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் பாக்டீரியாக்கள் அழிந்துபோவதற்குப் பதிலாக, எடுத்துக்கொண்ட ஆன்டிபயாட்டிக் மருந்தை எதிர்த்து மேலும் பலமாக தாக்க ஆரம்பிக்கின்றன.
- உணவுகளுடன் ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கலத்தல்: விலங்குகளுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை அவற்றுக்கான தீவனங்களோடு கலந்து கொடுக்கும் வழக்கமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. விலங்குகளின் நோய்களைத் தீர்க்கவும், அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும் ஆன்டிபயாடிக் மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட கால்நடைகளின் நேரடி தொடர்பினாலோ அல்லது அவற்றை உட்கொள்வதாலோ, அதிகப் பயன்பாட்டினால் உண்டான ஆன்டிபயாடிக் எதிர்ப்பானது மனிதருக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.
ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பினால் உண்டாகும் விளைவுகள்
- ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பினால் எந்த நோய்க்கும் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக மருத்துவச் செலவுகளும் அதிக இறப்பு விகிதங்களும் ஏற்படுகின்றது.
- ஆன்டிபயாட்டிக் மருந்துகள் நமது உடலில் அதிகம் சேர்வதால் நிறையத் தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன - நிமோனியா, காசநோய், கோனோரியா மற்றும் சால்மோனெல்லோசிஸ் போன்ற நோய்த்தாக்கங்கள் இதனால் அதிகரித்து வருகின்றன. பாக்டீரியாக்கள் அதிக எதிர்ப்புத்திறன் கொண்டவையாக மாறிவிடுவதால் இத்தகைய வியாதிகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகி வருகின்றது.
தடுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்
ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பை தடுக்கவும் அவை பரவாமல் கட்டுப்படுத்தவும், பின்வரும் வழிகாட்டுதல்களை WHO வழங்குகிறது:
- அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர் மூலம் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையில்லை என்றால் ஒருபோது அவற்றை உட்கொள்ளக்கூடாது.
- பயன்படுத்திவிட்டு எஞ்சியுள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஒருபோதும் யாருக்கும் கொடுக்கவோ நீங்களே மீண்டும் பயன்படுத்தவோ கூடாது.
- எப்போதும் கைகளை நன்கு கழுவுவதன் மூலமும் ஆரோக்கியமான உணவைச் சுத்தமாக தயாரித்து உண்பதன் மூலமும் நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் அந்தந்த வயதில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலமும் தொற்றுநோய்களை நாம் வராமல் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலும்.
- உலகச் சுகாதார நிறுவனம் (WHO) மக்களுக்கு வழங்கியுள்ள ஐந்து முக்கிய ஆலோசனைகளைப் பின்பற்றி பாதுகாப்பான உணவுகளைத் தயார்செய்யுங்கள். உணவைச் சுத்தமாக வைத்திருங்கள், சமைத்த உணவுகளையும் சமைக்காத உணவுகளையும் பிரித்து வைத்துப் பயன்படுத்துங்கள், உணவை முழுமையாகச் சமையுங்கள், பாதுகாப்பான வெப்பநிலையில் உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், பாதுகாப்பான தண்ணீரையும் மூலப்பொருட்களையும் பயன்படுத்துங்கள் என்பவையே அந்த முக்கிய ஆலோசனைகள் ஆகும். ஆன்டிபயாடிக் மருந்துகளை வளர்ச்சிக்காகவோ நோயெதிர்ப்பிற்காவோ பயன்படுத்தாமல் வளர்க்கப்பட்ட விலங்குகள் அல்லது பறவைகளின் பாலையோ, இறைச்சியையோ அல்லது முட்டையையோ தேர்ந்தெடுத்து வாங்கி உட்கொள்ளுங்கள்.
சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு நோய் வரும்போது உடல் தனது பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்த சிறிது அவகாசம் கொடுங்கள். உடலின் பாதுகாப்பு அம்சமானது நோய்க்கிருமிகளுடன் சண்டையிடுவதற்குச் சிறந்த வழிமுறையைக் கொண்டிருப்பதால், அது தனது வேலையைச் செய்ய அனுமதியுங்கள். உடல் தனக்கு ஏற்பட்ட நோயின் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் போகும்போதுதான் மருத்துவர்களும் ஆன்டிபயாட்டிக்குகளும் தேவை. எனவே, புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள்!